பொதுவுடமை கட்சி என்றும் அழைக்கப்பட்ட சோசலிச இயக்கத்தின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய ப. ஜீவானந்தம் நாகர்கோவில அடுத்த அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் வாழ்ந்த பட்டத்தார் - உமையம்மாள் தம்பதியரின் மகனாக 21-08-1907-ம் ஆண்டு பிறந்தார்.
அந்த கிராமத்தின் காவல் தெய்வமாக விளங்கிய-சொரிமுத்து என்றும் அய்யனார் என்றும் அழைக்கப்பட்ட குல தெய்வத்தின் நினைவாக தங்களது அருமை மகனுக்கு பெற்றோர் சொரிமுத்து என பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
மகாத்மா காந்தியின் கொள்கைகள் இளம் வயதில் அவரை வெகுவாக கவர்ந்தது. சீர்திருத்த கொள்கைகளுடன் அந்நாட்களில் நாடகம் நடத்திவந்த அஞ்சாநெஞ்சன் விஸ்வநாத தாஸ் என்பவரோடு ஜீவா நெருங்கிப் பழகினார். சில நாடகங்களையும் அவருக்காக எழுதிக் கொடுத்தார்.
நாடகம் எழுதித் தயாரிக்கும் ஆற்றலுடன் ஒன்பதாவது வகுப்பில் படிக்கும்போதே காந்தியையும், கதரையும் பற்றியமுதல் கவிதையையும் எழுதினார்.
பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது "சுகுணராஜன் அல்லது சுதந்தரவீரன்" என்ற நாவலை எழுதினார். "ஞானபாஸ்கரன்" என்ற நாடகத்தை அவரே எழுதித் தயாரித்து அரங்கேற்றியதுடன் அந்த நாடகத்தில் நடிக்கவும் செய்தார்.
ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதற்காக போது அழைப்பு வந்த போது காந்திஜியின் கட்டளைப்படி அன்னியத் துணிகள் அணிவதை ஒழித்தல் என்ற திட்டத்தின் கீழ், திட்டுவிளை கிராமத்தில் தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் அன்னியத் துணி எதிர்ப்புப் பிராசாரக் கூட்டம் நடைபெற்றது. அவருடைய பேச்சு ஜீவாவைக் கவர்ந்தது. அன்று முதல் தனது இற்தி மூச்சு இருந்த வரை அவர் கதர் ஆடைகளையே விரும்பி அணிந்தார்.
வன்முறையில் நம்பிக்கையற்ற கொள்கை உடையவராக இருந்தபோதிலும் விடுதலைப் போரில் பங்கேற்ற மாவீரன் பகத் சிங்குக்கு அளிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை ஜீவாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த கொடுமையை கண்டு கொதித்துப் போய் சீறி எழுந்தார். வெள்ளையர் ஆட்சிக்கெதிராக அவர் ஊர்,ஊராக சென்று கண்டன் கூட்டங்களில் முழங்க தொடங்கினார். எரிமலையின் சீற்றத்துக்கு நிகரான அவரது அனல் கக்கும் கண்டன உரைகள் இளைஞர்களைக் பெரிதும் கவர்ந்தது.
பின்னர், பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போது சிறையிலிருந்து பகத் சிங் தன் தந்தைக்கு எழுதிய "நான் ஏன் நாத்திகனானேன்?" என்ற நூலினைத் தமிழில் மொழிபெயர்த்தார், ஜீவா. பகுத்தறிவு தந்தை ஈ.வெ.ரா. பெரியார் அதை வெளியிட்டார். இத்ற்காக ஜீவாவைக் கைதுசெய்த பிரிட்டிஷ் போலீசார், அவரது கை - கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு
ஜீவா முழுக்க முழுக்க பொதுவுடமை கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.
ஜீவாவின் தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கை அவரது ஊர் மக்களுக்கு ஆத்திரத்தை உண்டாக்கியது. மகனின் முழுநேர அரசியல் போக்கினால் அதிருப்தியடைந்த அவர்கள் ஜீவாவின் தந்தையை எதிர்த்தனர். ஜீவாவின் சார்பில் அவரது தந்தை ஊர் மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.
தன்மானம் மிக்கவரான ஜீவாவால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தன் கொள்கையைத் துறக்க மறுத்து-குடும்பத்தைத் துறந்து வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது அவருக்கு வயது 17.
வ.வே.சு. அய்யர் நடத்திய தேசிய குருகுலத்தில் இளம் வயதிலேயே ஜீவானந்தம் ஆசிரியர் பணி புரிந்தார். எனினும்,அய்யரின் தீண்டாமைக் கொள்கையை ஏற்காத ஜீவா, அந்த ஆசிரமம் மூடப்பட்ட பிறகு காரைக்குடிக்கு அருகில், சிராவயல் என்ற ஊரில் காந்தி ஆசிரமத்தை உருவாக்கினார். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளில் தனிப் பங்கேற்றவர்.
வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் போன்றவைகளிலும் இவரது பங்களிப்பு இன்றியமையாதது. தம்மை நாத்திகராக அறிவித்துக் கொண்டு, சிறந்த காந்தியவாதியாக, சுயமரியாதை இயக்க வீரராக, தமிழ்ப் பற்றாளராக, அனைத்திற்கும் மேலாக ஒரு பொதுவுடைமை இயக்கத் தலைவராக படிப்படியாக உயர்ந்த ஜீவா, கடலூர் சட்டமன்றத் தொகுதி ஹரிஜன வகுப்பைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. மகள் கண்ணம்மாவைத் திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், அந்த அம்மையார் குமுதா என்ற பெண் மகவைப் பெற்றெடுத்த சில நாள்களில் காலமானார். அதன்பிறகு 1948ஆம் ஆண்டு பத்மாவதி என்னும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்துகொண்டார். உஷா, உமா என்ற இரு பெண் குழந்தைகளும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.
கலை இலக்கிய உணர்வுள்ள ஜீவா பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, பகுத்தறிவு, புரட்சி, ஜனசக்தி, தாமரை ஆகிய பத்திரிகைகளில் கவிதைகளும் ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியுள்ளார். பாரதியின் பாதையைப் பின்பற்றி பாமரர்களை எழுச்சி பெறச் செய்த பாடல்கள் பலவற்றைப் பாடியவர்.
பொதுவுடைமை கட்சிக் கூட்டங்களில் முதல் முறையாகத் தமிழ் இலக்கியப் பெருமைகளை பேசி, தமிழ்க் கலாச்சாரத்தோடு, கட்சியை வளர்த்தவர்.
பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருந்த ஜீவா, அடிக்கடி வெளியூருக்குச் சென்று மக்களைத் தன் உணர்ச்சிமிக்க சொற்களால் தட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டார். ஜீவா ரயிலிலிருந்து இறங்கும் போது அவரைக் கைது செய்யக் காவலர்கள் காத்திருப்பர். இத்தகைய வாழ்க்கைக்குத் தன்னை பக்குவப்படுத்திக் கொண்ட ஜீவாவின் துணைவியார் பத்மாவதி, "ஜீவா ஏறினா ரெயில்; இறங்கினா ஜெயில்!" என்று வேடிக்கையாக குறிப்பிடுவார்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு தியாகங்கள் பல புரிந்த பொதுவுடமைத் தலைவரான ஜீவா, சுமார் பத்து ஆண்டுகளை சிறையில் கழித்தார்.
அப்பழுக்கற்ற நேர்மை, தன்னலம் கருதாத தொண்டுள்ளம், எதற்கும் அஞ்சாத வைர நெஞ்சம், கொண்ட கொள்கையில் இருந்து தடம் புரளாத நெஞ்சுறுதி படைத்த ஜீவாவின் எளிய வாழ்க்கையை இன்றைய இளைய தலைமுறையினர் உணர்ந்துக் கொள்ள அவரது வாழ்வில் நிகழ்ந்த ஓரிரு சம்பவங்களை இன்று பகிர்ந்து கொள்வது மிக பொருத்தமாக இருக்கும்.
சென்னைக்கு வருவதற்காகக்
கோவை ரயில் நிலையத்தில் தோழர் ஒருவருடன் ஜீவா காத்திருந்தார். கையில் பெரிய பணமூட்டை. அது, கட்சிக்காக அன்றைய பொழுது திரட்டப்பட்ட நிதி. காலையிலிருந்து ஜீவாவும் அவருடைய தோழரும் கொலைப் பட்டினி. அலைச்சலால் ஏற்பட்ட அசதி வேறு! ஜீவாவிடம் அந்தத் தோழர், "பசி வயிற்றைக் கிள்ளுது. சாப்பிடலாமா?" என்றார். "சாப்பிடலாமே ! ஆனால், காசு எது?" என்றார் ஜீவா. "அதுதான் உங்கள் கையில் பெரிய பணமூட்டை உள்ளதே " என்றார் அந்த தோழர்.
ஜீவாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்ன பேசுறீங்க... அது மக்கள் கொடுத்த பொதுப் பணம். அதிலிருந்து ஒரு காசு கூட எடுக்கக் கூடாது" என்று உறுதியாக மறுத்துவிட்டார் ஜீவா. பின்பு, அங்கு வந்த தோழர் ஒருவர் இருவருக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுத்தார்.
தற்கால அரசியல்வாதிகள் போலன்றி, அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதிலும் காமராஜரும் ஜீவாவும் ஒருவர் மீது மற்றவர் அளவுகடந்த அன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தனர்.
சென்னை மாகாண முதலமைச்சராக பெருந்தலைவர்
காமராஜர் பதவி வகித்த காலத்தில், தாம்பரம் வழியாகச் செல்லும்போது காரை ஜீவாவின் குடிசை வீட்டுக்கு விடச் சொல்வார். அவ்வாறு ஒருமுறை காமராஜர் ஜீவாவின் வீட்டுக்குள் நுழைந்த போது, ஜீவா நான்கு முழ வேட்டியின் ஒருமுனையை மரத்தில் கட்டிவிட்டு, மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வெயிலில் காய வைத்துக் கொண்டிருந்தார். உடனே, வசதியில்லாமல் வாழ்ந்த ஜீவாவுக்கு நான்கு ஜோடி வேட்டி, முழங்கைச் சட்டைகளை நட்புரிமையுடன் வாங்கித் தந்தார் காமராஜர்.
பாரதிதாசன், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா, என்,எஸ்.கிருஷ்ணன், ம.பொ.சி என கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரையும் அன்புடனும் நட்புடனும் நேசித்தவர் ஜீவா.
ப.ஜீவானந்தத்தை பற்றி உலகத் தமிழ் மாநாட்டு சிறப்பு மலரில் அந்நாள் தமிழ்நாடு முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். எழுதும் போது "பொதுவுடைமைப் பெருந்தகை தோழர் ஜீவாவை கலைவாணர் என்,எஸ்.கிருஷ்ணன் மூலமாக ஆரம்ப காலத்தில் அறிமுகம் செய்துகொள்ளும் பேறு பெற்றேன்" என்று பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வண்ணாரப்பேட்டைத் தொகுதியிலிருந்து வென்று சட்டமன்றத்திற்கு சென்றார் ஜீவா. 1952 முதல் 1957 வரை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த காலகட்டத்தில் குலக் கல்வித் திட்டத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்பைத் தொடர்ந்து ராஜாஜி பதவி விலகினார். 1954 ஏப்ரலில் காமராஜர் முதலமைச்சர் ஆனார்.
அவ்வேளையில், மேடை நாடகங்களை நெறிப்படுத்துவதாகச் சொல்லி அரசு ஒரு மசோதாவைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது. குறிப்பாக, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் நாடகங்களைத் தடை செய்வதற்காகவே இப்படியொரு மசோதாவைக் கொண்டு வரப்பட்டது.
புனிதமானவர்கள் என்றும், தெய்வாம்சம் என்றும் பலரால் நெடுங்காலமாகப் போற்றப்பட்ட புராணப் பாத்திரங்களை அவமதிப்பதை மத உணர்ச்சியைப் புண்படுத்துவதைத் தடுப்பதே மசோதாவின் நோக்கம்என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. இந்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது சட்டமன்றத்தில் ஜீவா தந்த பதிலடி மிக நுணுக்கமானது .
’கண்ணாடிக்கு முன்போய் நின்ற மூக்கரையன் கண்ணாடியில் தன் கோரமான முகத்தைப் பார்த்துக் கொண்ட போது தன் உருவம் எவ்வளவு கோரமானது என்று சிந்தித்துப் பார்க்காது, கண்ணாடியை உடைத்தெறிந்தது போல, புராணங்களில் உள்ள ஆபாசத்தை எடுத்துச் சொன்னால், இதிகாசங்களில் உள்ள ஊழல்களை எடுத்துக் காட்டினால் காட்டுபவர்களின் மேல் சீற்றப்படுகிறார்கள் சிலர். (சிரிப்பு)
காரணம், அவர்கள் மனம் புண்படுகிறதாம். வாஸ்தவம். புண்படத்தானே செய்யும். ஆனால், எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா? இவ்வளவு ஆபாசமானவைகள் எல்லாம் எங்கள் மதத்தில் இருக்கின்றனவே என்று எண்ணும்போது எங்கள் மனம் மாத்திரம் புண்படவில்லையா என்று கேட்கிறேன்.’ என்று நகச்சுவை ததும்பும் பகுத்தறிவு பிரசாரத்தின் மூலமாகவே அந்த மசோதாவை ஏன் எதிர்க்கிறோம்?என்பதற்கான கொள்க விளக்கத்தை அவர் பதிவு செய்தார்.
எளிய அர்சியல் வாழ்க்கைக்கு புதிய அகராதியாக வாழ்ந்து காட்டிய ப. ஜீவானந்தம் 18-01-1963 அன்று காலமானார்.
ப.ஜீவானந்தம் நினைவைப் போற்றும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயிலில் பொதுவுடைமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இங்கு ப.ஜீவானந்தத்தின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்களும் இங்கு கண்காட்சியாக வைக்ப்பட்டுள்ளது.
தன்னிகரற்ற அந்த பொதுவுடமை தலைவரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில முக்கிய நிகழ்வுகளை அவரது 51-வது நினைவு தினமான இன்று, வாசகர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மாலை மலர்.டாட் காம் பெருமகிழ்ச்சி அடைகின்றது.