Monday, 2 December 2013

இந்தியாவில் முழு உடல் ஸ்கேனர்களை இரண்டு விமான நிலையங்களில் நிறுவ முடிவு

ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் மொத்தம் 125 விமான நிலையங்கள் இயங்கிவருகின்றன. இவை தவிர 5 தனியார் விமான நிலையங்களும் இந்தியாவில் உள்ளன. இவற்றுள், மெட்ரோ அல்லாத இரண்டு விமானநிலையங்களில் சோதனை முயற்சியில் தொழில்நுட்ப முழு உடல் ஸ்கேனர்களை நிறுவுவதற்கு இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இவற்றை நிறுவுவது குறித்து பயணிகளின் கருத்தும் தெரிந்து கொள்ளப்படும் என்று நிறுவனத் தகவல்கள் தெரிவித்தன. இந்த ஸ்கேனர்கள் எங்கு நிறுவப்படுகின்றன என்ற தகவலோ அதற்கான காலக்கெடுவோ தெரிவிக்கப்படவில்லை. இந்தியாவின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள இரு விமானநிலையங்களில் இந்த இயந்திரங்கள் பொருத்தப்படும் என்றும் விரைவில் அந்த நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என்றும் மட்டுமே அதிகரிகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2009-ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் விமான நிலையத்தில் நடைபெற்ற உள்ளாடை குண்டு சம்பவத்தைத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள உள்நாட்டு விமான நிலையத்தில் 2010-ம் ஆண்டு முழு உடல் ஸ்கேனர் ஒன்று நிறுவப்பட்டது. ஆனால் இதில் தங்களின் பிரைவசி பாதிக்கப்படுவதாகப் பெண்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

தற்போதைய மில்லி மீட்டர் தொழில்நுட்பத்தில் பிரைவசி பாதிக்கப்படாத வண்ணம் பொதுவான உருவப்படம் மட்டுமே தோன்றும் என்று ஏர்போர்ட்ஸ் அதாரிட்டி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், பயணிகளின் சம்மதமும், ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு கோடி திட்ட மதிப்பீடும் இடப்பட்டுள்ளதால் கால அவகாசம் தேவை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment