Friday 10 January 2014

குடியரசு தினத்துக்குள் 1 கோடி உறுப்பினர்களை சேர்ப்பதில் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரம்

டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த பிறகு ஆம் ஆத்மி கட்சிக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது.

இதுவரை அரசியலில் பங்குகொள்வதை விரும்பாத பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், குடியரசு தினமான வரும் 26-ம் தேதிக்குள் ஆம் ஆத்மி கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை இணைக்கும் நோக்கத்தில் ‘நானும் ஆம் ஆத்மி’ என்ற பெயரில் மாபெரும் உறுப்பினர் சேர்ப்பு முகாமை அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல் மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார்.

பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் சுறுசுறுப்பாக புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணீயில் தீவிரம் காட்டிவரும் கெஜ்ரிவால் இம்முகாமின் போது நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

‘நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியின் கிளை அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. புதிய உறுப்பினர்களாக இணைய விரும்புபவர்கள் இந்த அலுவலகங்களை தொடர்பு கொண்டு ஆர்வத்துடன் தகவல்களை அறிந்து செல்கின்றனர்.

அவர்களின் வசதிக்காகவும் உறுப்பினர் சேர்க்கையை எளிமைப்படுத்தவும் 07798220033 என்ற இலவச ஹெல்ப்லைன் எண் தொடங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான இந்த எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அல்லது ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். உறுப்பினராக சேர்வது தொடர்பான பொதுமக்களின் ஐயங்களுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும். இதே எண்ணின் மூலம் சேர்ந்தவரின் உறுப்பினர் எண்ணும் பொதுமக்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

இதற்கு முன்புவரை புதிய உறுப்பினர் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது, அந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டு முற்றிலும் இலவசமாக இந்த புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. வரும் குடியரசு தினத்துக்குள் (ஜனவரி-26) நாடு முழுவதும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’ என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment